தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 27, 2023, 10:39 AM IST

ETV Bharat / state

தங்கம் கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஊழியர்.. சென்னையில் கடத்தல் ஆசாமிக்கு வலைவவீச்சு!

துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2.6 கிலோ தங்கத்தை வெளிக்கொண்டு வர உதவிய தூய்மை பணியாளரை சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

தங்கத்தை கடத்த உதவிய விமான நிலைய ஊழியர் கைது - கடத்தல் ஆசாமிக்கு வலைவீச்சு!
தங்கத்தை கடத்த உதவிய விமான நிலைய ஊழியர் கைது - கடத்தல் ஆசாமிக்கு வலைவீச்சு!

சென்னை:சென்னை விமான நிலையத்தில் கடந்த பிப்.25 அன்று மாலை, விமான நிலைய ஹவுஸ் கீப்பிங் எனப்படும் தூய்மை பணியாளர்கள், தங்களது வழக்கமான பணி முடிந்து வெளியே சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நிறுத்தி, சோதனையிட்டு அனுப்பினர். இந்த நிலையில் ஆண் ஊழியர் ஒருவரைச் சோதனை செய்தபோது, அவருடைய கால்சட்டை பின் பாக்கெட்டுகளில் சந்தேகத்துக்கு இடமான பொருள் இருந்துள்ளது.

இதனையடுத்து அதிலிருந்த பொருளைச் சோதனை செய்தபோது, சுமார் 2.6 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தங்கத்தை வைத்திருந்த ஹவுஸ் கீப்பிங் ஊழியரை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், இலங்கைப் பயணி ஒருவர் துபாயிலிருந்து இந்த தங்கத்தைக் கடத்தி வந்ததும், அதனை ஹவுஸ் கீப்பிங் ஊழியரிடம் கொடுத்து வெளியே வந்து கொடுக்கும்படி கூறியதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், விமான நிலைய ஊழியரையும் கைது செய்தனர். மேலும் இவரிடம் கடத்தல் தங்கத்தைக் கொடுத்து விட்டுத் தலைமறைவான இலங்கைப் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். மேலும் கடத்தி வரப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு 1.2 கோடி ரூபாய் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆந்திரா டூ சென்னை 200 கஞ்சா கடத்தல்.. இருவர் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details