சென்னை:துபாயிலிருந்து இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று கடந்த 10ஆம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கி சென்றனர். அந்த விமானம் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிருந்தது. எனவே பணியாளர்கள் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விமானத்திற்குள் பயணிகள் அமரும் இருக்கை ஒன்று வழக்கத்துக்கு மாறாக உயர்ந்து இருந்தது. அதை சரி செய்ய முயன்றபோது, இருக்கைக்கு கீழே பிளாஸ்டிக் பவுச் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து பணியாளர்கள் விமான பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பிளாஸ்டிக் பவுச்சை சோதனை செய்தனர். அப்போது பவுச்சில் தங்கப்பசை இருந்ததை கண்டுபிடித்தனர்.
உடனடியாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் அதனை ஒப்படைத்தனர். சுங்க அதிகாரிகள், அந்தப் பவுச்சுக்குள் இருந்த 1.6 கிலோ தங்கப்பசையை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு 78.2 லட்சம் ரூபாய் என தெரிகிறது.
சுங்க அதிகாரிகள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, துபாயில் இருந்து கடத்தி வந்த தங்க பசையை, விமானத்திற்குள் மறைத்து வைத்துவிட்டு, தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனர். விமானத்திற்கு உள்ள சிசிடிவி கேமரா, விமானநிலைய நிலைய வருகை பகுதியில் உள்ள கேமரா ஆகியவற்றை தீவிரமாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.