சென்னை விமான நிலையத்தில் சா்வதேச முனையம் மற்றும் உள்நாட்டு முனையம் இடையே பயணிகள் வசதிக்காக பேட்டரி வாகனங்கள் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வந்தன. இதனால் உள்நாட்டு விமானங்களில் வந்து சர்வதேச விமானத்திற்கு போக வேண்டிய பயணிகள் சுமாா் ஒரு கி.மீ.தூரத்தில் உள்ள சா்வதேச முனையத்திற்கு செல்வதற்கும் சர்வதேச விமானங்களில் வந்து உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கும் இந்த பேட்டரி வாகனங்கள் பெரிதும் பயன்பட்டு வந்தன.
இந்த பேட்ரி வாகனங்களில் பயணிகள் மட்டுமின்றி அவா்களின் லக்கேஜ்களும் எடுத்து செல்லப்பட்டன. இந்த வாகனங்களை நாள் ஒன்றுக்கு 3,000 முதல் 5,000 வரையிலான டிரான்சிஸ்ட் பயணிகள் பயன்படுத்தினர். இந்த வாகனங்களை ஷட்டில் காா் இந்தியா என்ற தனியாா் தொண்டு நிறுவனம் இயக்கி வந்தது. அந்த பேட்டரி வாகனங்களில் தனியாா் காா்ப்பரேட் நிறுவனங்கள் விளம்பரம் செய்தனா்.
அந்த விளம்பரதாரர்களின் ஸ்பான்சா் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் உதவியுடன் பயணிகளுக்கான இந்த சேவைகள் நடந்தன. தரை தளத்தில் உள்ள பயணிகள் வருகை பகுதி மற்றும் இரண்டாம் தளத்தில் உள்ள பயணிகள் புறப்பாடு பகுதிகளில் 24 மணி நேரமும் இந்த இலவச சேவை தொடா்ந்தது.