சென்னை:சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று காலை புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்கத்துறையினர் பரிசோதித்தனர்.
இந்த விமானத்தில் சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சோ்ந்த 5 பேர் ஒரு குழுவாக சிறப்பு அனுமதி பெற்று துபாய் செல்ல வந்தனர். அவர்கள் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை நிறுத்தி விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டபோது, உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்த அமெரிக்க டாலர், சவுதி ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, அவர்கள் கொண்டு வந்த கைப்பைகளிலும் வெளிநாட்டு பணம் இருந்தது. அனைத்தையும் சுங்கத்துறையினர் கைப்பற்றினா். அதன் மதிப்பு சுமாா் 60 லட்ச ரூபாயாகும்.
இதையடுத்து 5 பேரின் பயணத்தையும் ரத்து செய்த சுங்கத்துறையினர் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
இந்தப் பணம் கணக்கில் வராத ஹவாலா பணம் என்று தெரியவந்துள்ளது. இவர்களிடம் இந்த ஹவாலா பணத்தை கொடுத்து அனுப்பியது யார்? துபாயில் யாரிடம் கொடுக்க புறப்பட்டனர் என்று தொடா்ந்து விசாரணை நடக்கிறது.
இதையும் படிங்க:'நட்சத்திர விடுதியில் கும்மாளம்'- கூண்டோடு சிக்கிய ஆன்லைன் மோசடி கும்பல்!