சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் துறையின் கூடுதல் ஆணையர்கள் சுதாகர், பிரேம் ஆனந்த் சின்ஹா, அஸ்ரா கார்க் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறுகையில், “சென்னை பெருநகர காவல் எல்லை உட்பட்ட பகுதிகளில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தீபாவளி தினத்தன்றும், அதற்கு முந்தைய தினமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும், உச்சநீதிமன்ற அறிவிப்பின்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
நீதிமன்றம் அறிவித்த நேரத்தைத் தவிர மற்ற நேரத்தில் பட்டாசுகளை வெடித்தால் நிச்சயம் வழக்குப்பதிவு செய்யப்படும். கடந்த ஆண்டுகளிலும் இதே போன்ற நிலை தான் காவல்துறை மூலம் பின்பற்றப்பட்டு வருகிறது. பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பான இடங்களில் வைத்து வெடிக்க வேண்டும் எனத் தெரிவித்த கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, காவல்துறை சார்பில் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும்" கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர், “வெளியூர் செல்ல வழக்கமாக 4 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் தற்போது கூடுதலாக 6 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதாவது, கூடுதல் பேருந்தையும் சேர்த்து மொத்தமாக 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையம், கே.கே நகர், மாதவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதால், போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பொதுமக்கள் தீபாவளி தினத்தன்று பண்டிகையைக் கொண்டாடுவதற்கு முன்பாக மால் மற்றும் திரையரங்குகள் போன்ற இடங்களுக்கும், கடை வீதிகள் சென்று பொருட்களை வாங்குவதற்கு அதிகளவில் செல்வார்கள் என்பதால், அதற்கு ஏற்றார் போல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.