சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் தமிழ் பூங்கா தெருவில் வசித்து வருபவர் ஜீவானந்தம் (35). இவர் சேலையூர் பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர் சுதந்திர தினத்தன்று காலை அவரது வீட்டிலிருந்து ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள மாமியார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார்.
பின்னர் இரண்டு நாள்கள் கழித்து ஜீவானந்தத்தின் வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதாக பக்கத்து வீட்டுக்காரர் ஜீவானந்தத்துக்கு தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்தார். இதனையறிந்தவுடன் பதறி அடித்துக் கொண்டு வீட்டின் உள்ளே செல்வதற்கு முன்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக தாம்பரம் காவல் துறையினர் வந்து ஜீவானந்தத்தை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பட்டுப்புடவைகள், 8500 ரூபாய் பணம், புதிதாக பளபளவென்று இருந்த இரண்டு சில்வர் பாத்திரங்கள் மற்றும் 1 கிலோ கவரிங் நகையை தங்க நகைகள் கொள்ளையடித்தது தெரிய வந்தது.
மேலும் பழுதாக இருந்த சொக்கத் தங்கத்தை போலி தங்கம் என்று நினைத்து பீரோவில் விட்டுவிட்டு கவரிங் நகையை கொள்ளையன் திருடிச் சென்றதும் தெரியவந்தது. 18 சவரன் தங்க நகை பீரோவில் பத்திரமாக இருந்ததைப் பார்த்த ஜீவானந்தம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். பின்னர் தாம்பரம் காவல் துறையினர் கைரேகை நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள்
கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் வீடு முழுவதும் சோதனை செய்தனர். இறுதியில் கத்திரிக்கோலில் திருடனின் கைரேகை தெளிவாக சிக்கியது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தாம்பரம் காவலர்கள், ஒரு கிலோ கவரிங் நகை மற்றும் பட்டுப் புடவைகள் திருடுயது குறித்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை தொடங்கினார். அதில் கைரேகை நிபுணர்கள் சோதனையில் ஏற்கனவே வாகன திருட்டில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியின் கைரேகையுடன் ஒத்துப்போனது. அதில் திருடியவர் மதுரவாயிலை சேர்ந்த செல்வா என்பது தெரியவந்தது.