சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ்(28), விஷ்ணு(24), பாரதிராஜா, முத்து. இவர்கள் நான்கு பேரும், சாந்தோம் பாபநாசம் சிவன் சாலை வழியாக நேற்று இரவு 12 மணியளவில் ஒரு இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளனர். விஷ்ணுதான் இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். மற்ற மூவரும் பின்னால் அமர்ந்துள்ளனர். அப்போது சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் அதன் மீது மிக வேகமாக ஏறியதில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது.
குடியால் நிகழ்ந்த வாகன விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி..! - விபத்து
சென்னை: மயிலாப்பூர் அருகே சாலையோரமாக இருந்த மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமைடந்த இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பின்னர் சாலையின் ஓரமாக இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், விஷ்ணு, வெங்கடேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவலர்கள், படுகாயமடைந்த பாரதிராஜா, முத்து இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்த விஷ்ணு, வெங்கடேஷ் ஆகியோரின் சடலங்களை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த அனைவருமே மது அருந்தி இருந்தது தெரிய வந்துள்ளது.