விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (47) இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். தற்போது இவர்கள் சென்னை கிழக்கு தாம்பரம் அருகேயுள்ள புத்தர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். ராஜசேகர் மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
ஜெயலட்சுமி சேலையூர் பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். நேற்று (ஆக.19) ராஜசேகருக்கு இரவு பணி என்பதால் வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு, தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் அதனை விட்டுவிட்டு சாலையைக் கடந்துள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரண்டு பேர் ராஜசேகர் மீது மோதி உள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த ராஜசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே அங்கிருந்த வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படுத்திய ஒருவரை மடக்கிப் பிடித்தனர். இருப்பினும், மற்றொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து பொதுமக்கள் சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.