100க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களை கொத்தடிமைகளாக வைத்து கொடுமைப்படுத்திய மர வியாபாரியை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சேர்ந்து டிஜிபி அலுவலகத்தில் புகார் சென்னை: செங்கல்பட்டில் முக்கியஸ்தராக உள்ள படூர் பாலு என்பவர் மர வியாபாரம் செய்து வந்துள்ளார். மரம் வெட்டும் பணிகளுக்காக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களை மட்டும் கொத்தடிமைகளாக கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு பணிக்காக அழைத்து வந்து மூன்று வருடங்களாக பெண்கள் உள்பட 40 பேரை சரியாக உணவு கொடுக்காமல் தாக்கி கொடுமைப்படுத்தி வேலையில் ஈடுபடுத்தி வந்ததாக தெரிகிறது. இதுமட்டுமின்றி பணிக்கு வந்த 10ஆம் வகுப்பு பெண், கர்ப்பிணி பெண், திருமணமான பெண் என 20க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தொடர்ச்சியாக படூர் பாலு தினமும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் படூர் பாலு மீது கொத்தடிமை, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கேளம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், பல நாட்களாகியும் படூர் பாலுவை கேளம்பாக்கம் போலீசார் கைது செய்யாமல் இருப்பதாகக் கூறி அனைத்திந்திய மாதர் சங்கம், பீபள்ஸ் வாட்ச் உள்பட பல்வேறு அமைப்புகள் கூட்டாக வந்து டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
இதையும் படிங்க: Thoothukudi Sterlite:தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 200 டன் ஜிப்சம் அகற்றம்..!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டீனா, “இவ்வளவு பெரிய குற்றத்தில் ஈடுபட்ட படூர் பாலு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து இன்னும் கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. இந்தியாவில் 1976ஆம் ஆண்டே கொத்தடிமை தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதுநாள் வரை தமிழ்நாட்டில் கொத்தடிமைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்” என தெரிவித்தார்.
மேலும் அவர், “தமிழ்நாட்டில் கொத்தடிமைகளை கண்டறிந்து போலீசார் மீட்க வேண்டும். மேலும், உடனடியாக மர வியாபாரி படூர் பாலு மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கூறினார். இதனை வலியுறுத்தி கூட்டாக இணைந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: எதிர்கால தமிழகத்தை கஞ்சிக்கு கெஞ்ச விடாதீர்கள்; தமிழ்நாடு வேளாண் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வேதனை!