சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி கடந்த 21ஆம் தேதி முதலமைச்சரின் கரூர் பயண நிகழ்ச்சிகளை மேற்பார்வையிட்டார். அப்போது, உடன் பணியிலிருந்த பெண் எஸ்பி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட பெண் எஸ்பி, சட்டம் ஒழுங்கு காவல் துறை டிஜிபி திரிபாதியிடம் புகாரளித்தார். இதையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமானது.
சிறப்பு டிஜிபி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக சட்டம் ஒழுங்கு காவல் துறை டிஜிபி திரிபாதியிடம் புகாரளிக்கச் சென்ற பெண் எஸ்பியை, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறப்பு டிஜிபி தடுக்க முயற்சித்துள்ளார்.
புகாரளிக்கச் சென்ற பெண் எஸ்பி பரனூர் சுங்கச்சாவடியை நெருங்கும்போது செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் தலைமையிலான காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, கார் சாவியையும் பறித்துள்ளனர். பின்னர் பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபியிடம் பேச வேண்டும் என வற்புறுத்தியிருக்கின்றனர்.
இவர்களின் தடையை மீறி சட்டம் ஒழுங்கு காவல் துறை டிஜிபி திரிபாதியிடம் அப்பெண் எஸ்பி புகாரளித்திருக்கிறார். இந்த வழக்கில் பெண் எஸ்பியை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.