சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவரின் இரண்டாவது மகனும், 9வது வார்டு உறுப்பினருமான அன்பரசு, நேற்றிரவு கீரப்பாக்கம் துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில் நவீன்குமார் என்பவரின் படத்திறப்பு விழாவிற்காகச் சென்றுள்ளார்.
அப்போது, அன்பரசு உள்பட அவரது நண்பர்கள் 7 பேர் காரில் சென்றுவிட்டு, அங்குள்ள சுடுகாட்டு வாசலில் அமர்ந்து நேற்று இரவு சுமார் 10.30 பணியாளவில் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மறைந்திருந்த ஒரு ரவுடி கும்பல், அன்பரசு எடுத்து வந்த கார் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் காரின் கண்ணாடி உடைந்துள்ளது.
இதனைக் கண்டதும் மது அருந்தி கொண்டிருந்த 7 பேரும் நாலாபுறமும் சிதறி ஓடி உள்ளனர். இதில் கையில் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால், ரவுடி கும்பல் அன்பரசை ஓட ஓட விரட்டி கை, கால்கள், கழுத்து, தலை, முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமரியாக வெட்டி உள்ளது.
இதில் அன்பரசு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பின்னர் அந்த ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், திருப்போரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காயார் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அன்பரசன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சொந்த மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை!