இந்தியாவில் "ஜெய் ஹிந்த்” முழக்கத்தை செண்பகராமன் சின்னஞ் சிறு பாலகனாக, பள்ளி மாணவனாக இருந்த காலத்திலேயே, சிருஷ்டித்து விட்டார் என்றால் உலகம் நிச்சயம் ஆச்சரியப்படத் தான் செய்யும். பன்னிரண்டு உலக மொழிகளில், மிகச் சரளமாக உரையாடும் ஆற்றல் மிக்க செண்பகராமன், அந்தக் கட்டத்திலே, ஒரு சர்வதேச கதாநாயகனாகத் திகழ்ந்தார்.
“எனது தாயகத்தின் மண்ணோடு மண்ணாக என்னுடல் கலக்க வேண்டும். அகண்ட பாரதத்தின் பரந்து விரிந்த வயல்களுக்கு, என் எலும்புகளும், நரம்புகளும் உரமாக வேண்டும் என்று கூறியவர் பண்டிட் ஜவஹர்லால் நேரு என்பது பலருக்குத் தெரியும். ஆனால் நேருஜிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே செந்தமிழ் வீரன், “சுதந்திர இந்தியாவில் , நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் என் அஸ்தியைத் தூவ வேண்டும்” என்று செண்பகராமன் கூறியுள்ளார்.
சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த செண்பகராமன் என்று அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை 1891ம் ஆண்டு செப்டம்பர் 15 பிறந்தவர் அவர், 1934 ம் ஆண்டு மே மாதம் 26 ந் தேதி வரையில் வாழ்ந்தார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி. இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தார்.
செண்பகராமன் 1891 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான புத்தன் சந்தை என்ற ஊரில் பிறந்தார். தந்தை சின்னசாமிப்பிள்ளை, தாயார் நாகம்மாள். சின்னசாமிபிள்ளை திருவாங்கூர் சுதேச அரசாங்க சேவையில் தலைமை கான்ஸ்டபிளாக இருந்தார். செண்பகராமன் இளம் வயதிலேயே விளையாட்டிலும், சிலம்பம், வாள்வீச்சு போன்ற கலைகளிலும் சிறந்து விளங்கினார். திருவனந்தபுரம் மன்னர் உயர் நிலைப் பள்ளியில் தம் பள்ளிப் படிப்பைத் தொடங்கினார்.
வீரபாண்டியகட்டபொம்மன் ஆரம்பித்த விடுதலைப்போர், இந்தியா முழுவதும் பரவிய காலம் அது. இந்திய உபகண்டமெங்கும் ஒரே கொந்தளிப்பு. அதை அடக்க பிரிட்டிஷ் ஆட்சியினர், கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட போராட்டத்தில் குதித்தனர். அப்போது திருவனந்தபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு, ஒரு குட்டித் தலைவன் வயது பதினைந்துதான். ஆனால் ஆற்றலோ, அணைகடந்ததாக அமைந்தது.
இந்தச் சிறுவன் நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்களின் தலைவனாகி விட்டான். எழுச்சி மிக்க அவனது பேச்சுக்கள், இளைஞர்களின் இதயங்களில் ஆழப் பாய்ந்தன. அவர் ஆரம்பித்த தேசியப்படை, பலமிக்க ஒரு நிறுவனமாக உருவாகியது. சிறுவனது வாயையும், கரங்களையும் கட்டிப் போட முயன்றது. இதனால் சின்னஞ் சிறு வீரன் செண்பகராமனுக்கு சுதந்திரத் தாகம் எரிமலையாகியது.
திருவனந்தபுரத்திலே அடங்கிக் கிடந்த செண்பகராமனை, உலகம் அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் இக்கட்டத்தில் தான் ஏற்பட்டது.
இந்த நிலையில், 1908-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் திகதி என்.எல்.ஜி.யோர்க் என்ற ஜெர்மனிய கப்பலில் ஏறி செண்பகராமன் ஐரோப்பிய நாட்டிற்கு சென்றார். செண்பகராமனின் வீட்டுக்கு பலத்த காவல், பள்ளிக்கூடத்திற் பயிலும் சின்னஞ் சிறு மாணவன் எங்கே எப்படி மறைந்திருக்க முடியும் என்ற கேள்வியைக் கேட்டுக் கேட்டு கிலிபிடித்துக் கலங்கினர் வெள்ளையர்கள்.
ஐரோப்பா நோக்கிச் சென்ற அவன் கால்கள் இத்தாலியில் சிறிது காலம் நிலைத்தன. அங்கு இலக்கியம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்று, பின் சுவிட்சர்லாந்திற்குச் சென்றார். அங்குள்ள கலாசாலை ஒன்றின் மிகச் சிறந்த மாணவனாக திகழ்ந்த செண்பகராமன் பட்டங்கள் பலவற்றைத் தன் பெயரோடு சேர்த்துக் கொண்டார்.
மாணவராக இருக்கும் போதே, சுவிட்சர்லாந்தில் நிகழ்த்திய பல சொற்பொழிவுகளின் போது, இந்திய நாட்டில் நடைபெறும் அந்நிய அடக்கு முறைகளைப் பற்றி வீரம் கொப்பளிக்கும் வகையில் எடுத்துக் கூறி, இந்தியாவின்பால், அந்நாட்டு மக்களின் அனுதாபத்தையும், ஆதரவையும் திருப்ப முயன்றார். சுவிட்சர்லாந்திலிருந்து ஜெர்மனியின் தலைநகரான பெர்லினுக்குச் சென்ற செண்பகராமன், அங்குள்ள பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்று, தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டார்.
விடுதலைப் போரில் ஈடுபாடு
இவர் மன்னர் உயர் நிலைப்பள்ளியில் ஆறாம் படிவம் (1960 க்கு முந்தைய பள்ளி இறுதி வகுப்பு) படித்துக் கொண்டிருந்த போது இந்தியாவில் விடுதலைக் கணல் எரியத்தொடங்கிய காலம். செண்பகராமனையும் விடுதலை தீ பற்றிக்கொண்டது. அச்சிறிய வயதிலேயே தம்முடன் பயின்ற மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு "ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம்" ஏற்படுத்தி ”வந்தே மாதரம்” என உரிமை முழக்கமிட்டார். அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு 'ஜெய் ஹிந்த்' என்ற முழக்கத்தை எழுப்பினார்.
”ஜெய் ஹிந்த்” எனும் முழக்கத்தை முதலில் முழங்கியவர் செண்பகராமன் பிள்ளையே ஆவார். 1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் அவர் இம்முழக்கத்தை முழங்கினார். இதைக் கேட்ட நேதாஜி இம்முழக்கத்தை வழிமொழிந்து உலகெங்கும் பரப்பினார்.
வெளிநாடுகளில் விடுதலை உணர்வு
பெர்லினில் இந்திய சர்வதேசக் குழுவை நிறுவினார். ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவைக் குறித்து ஆங்கிலேயர் செய்து வந்த பொய் பிரச்சாரத்தை இக்குழுவின் உதவியுடன் முறியடித்தார். 'புரோ இந்தியா' என்ற இதழைத் தொடங்கி இந்தியர்களின் நிலைகளையும், ஆங்கிலேயர்கள் உருவாக்கிய இந்தியர்களைப் பற்றிய பொய்யான வதந்திகளையும் வெளிப்படுத்தினார். சீனா, தென்னாப்பிரிக்கா, மியான்மர் முதலான நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து உலக மக்களிடையே விழிப்புணர்வு ஊட்டி இந்தியாவிற்கு ஆதரவைத் திரட்டினார்.
வெளிவிவகார அமைச்சர்
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து காபூலின் ராஜா மஹேந்திர பிரதாப்பை அதிபராகவும், மவுலானா பர்கத்தை பிரதம மந்திரியாகவும் கொண்டு இந்தியர்கள் தங்களே நடத்துகின்ற போட்டி அரசை 1915- ல் ஆப்கானித்தானில் நிறுவினர். இவ்வரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சராக செம்பகராமன் பிள்ளை பணியாற்றினார்.
இத்தகைய புரட்சிகளுக்கு ஜெர்மனி சுயநல நோக்கத்துடன் ஆதரவளித்து வந்தது. ஆங்கிலேய அரசு கொடுத்த நெருக்கடியின் காரணமாக ஜப்பான் அரசு இவ்வரசுக்கு கொடுத்த ஆதரவை 1918 ஆம் ஆண்டு திரும்பப் பெற்றதால் இந்தியாவின் தற்காலிக புகலிட அரசு ஆப்கானித்தானிலிருந்து வெளியேற்றப்பட்டது.