சென்னையில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நந்தனம் சந்திப்பில் மூன்று சிசிடிவி கேமராக்கள், கிண்டி சந்திப்பில் மூன்று சிசிடிவி கேமராக்கள், டைடல் பார்க் சந்திப்பில் மூன்று சிசிடிவி கேமராக்கள் என மொத்தம் ஒன்பது ANPR சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைப்பதற்கான நிகழ்ச்சி நந்தனம் சந்திப்பு அருகே நடைபெற்றது. இதில் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கலந்துகொண்டு மூன்று இடங்களிலும் உள்ள சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னை முழுவதும் உள்ள 335 சாலைகளில் 25 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் குற்றச் சம்பவங்கள் வெகுவாகக் குறைவதோடு, மக்களின் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வு விலகியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சிசிடிவி கேமராக்கள் வந்த பின்னர் வழிப்பறி தாக்குதல், சாலை விபத்தை ஏற்படுத்தி தப்பித்தல் உள்ளிட்ட வழக்குகளில் 76% போக்குவரத்து காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.