"ரெட் ஜெயன்ட் மூவிஸ்" முதலமைச்சரின் பினாமி நிறுவனம்: சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு! சென்னை: ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் புகார் அளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், உள்துறைச் செயலாளர் ஃபணீந்திர ரெட்டி ஆகிய 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் முதலமைச்சர் மீது புகார் என்றதும், இயக்குநர் என்னை சந்திக்க மறுத்துவிட்டார். அதன்பின் லஞ்ச ஒழிப்புத்துறையின் டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளேன். முதலமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்பது முதலமைச்சர் ஸ்டாலினின் பினாமி நிறுவனம். அவர் தன்னுடைய பினாமி நிறுவனத்திற்காக சட்டத்தை வளைக்கிறார். அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை பல்வேறு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்து, தன்னுடைய மகன் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதற்கு சிறப்பு காட்சிக்கான உத்தரவை வழங்கியுள்ளார்.
ஆகையால், இது லஞ்ச ஒழிப்புச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்பதால் விசாரணை நடத்தக்கோரி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளேன். நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீதிமன்றம் செல்வேன்’ என்றார்.
முதலமைச்சரின் பினாமி என்பதற்கான ஆதாரங்கள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, 'துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் எல்லா திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது. ஆனால், சிறப்பு காட்சிகளுக்காக அரசாணை இரவு தான் வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கு முன் 5 சிறப்புக் காட்சிகள் வெளியாகிவிட்டன. சட்ட விரோதமாக 950-ற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டன.
எனவே, இதற்கான ஆதாரங்கள் எதுவும் தேவையில்லை. இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்ததாக ஆளுநரை சந்திக்க உள்ளேன். லஞ்ச ஒழிப்புத்துறை இப்போது தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், ஆளும் ஆட்சியின் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதில் எனக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ’லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முறையான அமைச்சர் ரகுபதி தான். ஆனால், ரகுபதி மீது உச்ச நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியாக உள்ள அமைச்சரே துறை அமைச்சராக உள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி ஆளும் வர்க்கத்தினரை பாதுகாக்கக் கூடியவராக உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது 98 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியது தொடர்பாக மத்திய கணக்காயர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் புகார் அளித்தேன். ஆனால், அந்தப் புகார் மீது தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு அரசு ஆளுநர் மாளிகையில் பணியாற்றக்கூடிய அரசு அதிகாரிகளை வைத்து, ஆளுநர் மாளிகையில் என்ன நடக்கிறது என்பதை உளவு பார்ப்பதாக ஆளுநருக்குத் தகவல் வந்துள்ளது. அரசு அதிகாரி அளித்த வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டு ஆளுநர் டெல்லி சென்றுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் 2020ஆம் ஆண்டு அதிமுக அமைச்சர்கள் மீது புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தபோது திருத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சட்டத்தின் கீழ் நேரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடுவதற்கு அதிகாரம் உள்ளது எனத் தெரிவித்தார். இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஸ்டாலின் மீதும் உதயநிதி மற்றும் ஃபணீந்திர ரெட்டி மீதும் வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆளுநரை சந்தித்துப் புகார் அளிக்க உள்ளேன். மேலும் சட்ட ரீதியாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அனைத்தையும் செய்வேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: chennai metro: சென்னை மெட்ரோவில் ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் பயணம்!