சென்னை: திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற “மக்களைத் தேடி மேயர்” முகாமில் கலந்துகொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்களைத் தேடி மேயர் மக்கள் இருக்கும் இடத்திற்கே செல்ல வேண்டும் என தெரிவித்தவர், 2023-24ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், “மக்களைத் தேடி மேயர்” என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை களையும் வகையில், கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு முகாமில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 331 கோரிக்கை மனுக்களில் 272 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர்? அண்ணா பல்கலைக்கழகம் கேள்வி
இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் மேயர் பிரியா தலைமையில் “மக்களைத் தேடி மேயர்” திட்டத்தின் கீழ் மண்டலம்-6க்கு உட்பட்ட பொது மக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெறுவதற்கான முகாம் இன்று நடைபெற்றது. இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் மக்களை தேடி மேயர் திட்டத்தின் மூலம் மேயர் பிரியா நேரடியாக மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.