சென்னை: சேலம் மாவட்டத்தில் உள்ள காருவள்ளி கிராமத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில், வாரச்சந்தை நடத்தப்படுகிறது. 50 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வாரச் சந்தைக்கு விவசாயப் பொருட்களையும், கால்நடைகளை விற்கவும், வாங்கவும் வருவோரிடம் ஒப்பந்ததாரர் நுழைவுக் கட்டணம் வசூலித்து வருகிறார்.
கால்நடைகளுக்கு தலா நூறு ரூபாயும், 30 கிலோ காய்கறிகளுக்கு 50 ரூபாயும், கரும்பு ஏற்றி வரும் டிராக்டர்களுக்கு தலா ஆயிரத்து 500 ரூபாயும் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, சீனிவாசன் என்ற விவசாயி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவர் தொடர்ந்துள்ள வழக்கில், அதிக நுழைவுக் கட்டணம் வசூலிப்பது குறித்து அரசு அலுவலர்களுக்கு புகார் மனு அளித்தும், பரிசீலிக்கப்படவில்லை எனவும், நுழைவுக் கட்டணத்துக்கு ரசீது வழங்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதச் சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என அரசு பிளீடர் முத்துகுமார் தெரிவித்தார்.