தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் அதிரடி மாற்றம் விரைவில்! - பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டுவர விரைவில் அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

dpi office

By

Published : Sep 14, 2019, 1:46 PM IST

10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முறையில் பள்ளிக்கல்வித்துறை மாற்றம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. அரசின் ஒப்புதல் பெற்ற உடன் வரும் கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. 9, 10ஆம் வகுப்பிற்கான மொழித் தேர்வு தாள்களை ஒன்றாக இணைத்தல், 11, 12ஆம் வகுப்பு பாடமுறைப் பிரிவுகள் சீரமைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இயக்குநர்கள், இணை இயக்குநர்களின் கூட்டம் கடந்த மே 2ஆம் தேதி நடைபெற்றது.

அதில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்களை ஒருங்கிணைப்பது என முடிவெடுக்கப்பட்டது. 11,12ஆம் வகுப்பில் பல்வேறு பிரிவுகள் உள்ளதால் மாணவர்கள் அவற்றில் தேர்வு எழுதி வருகின்றனர். எனவே அதனை மாற்றி 500 மதிப்பெண்களுக்கு ஐந்து பாடங்களில் மட்டும் தேர்வு எழுதும் வகையில் மாற்றி அமைக்கப்படுகிறது.

பகுதி ஒன்றில் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது பிற மொழிகள், பகுதி இரண்டில் பொது பிரிவிற்கான ஏதாவது மூன்று பாடங்கள், பகுதி மூன்றில் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது பிற மொழிகள் அல்லது பகுதி இரண்டில் உள்ள ஏதாவது ஒரு பாடத்தினை தேர்வு செய்யலாம். தொழில் கல்வி பாடத்திட்டத்தினை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள முறையை தொடர்ந்து பின்பற்றலாம். இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கல்வியாளர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்களை அழைத்து கருத்து கேட்டு பிரிவுகளை ஒன்றிணைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தற்பொழுது தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப்பாடத்தில் தாள் 1 மற்றும் தாள்-2 என நடத்தப்பட்டு வருகிறது. அதனை கல்வியாளர்களின் கருத்து கேட்ட பின்னர் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மொழி பாடங்களில் இரண்டு தாள்களாக உள்ள தேர்வினை ஒரே தாளாக மாற்றலாம் என ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

DPI

அதனடிப்படையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி 1 (கட்டாயம்) தமிழ், பகுதி 2 (கட்டாயம்) ஆங்கிலம், பகுதி 3 கணக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பகுதி 4 (விருப்பப் பாடம்) மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர தங்களின் தாய்மொழியை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்து எழுதலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தின் முடிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டு அரசின் அனுமதி பெற்ற உடன் வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தச் செய்திக்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் இது போன்ற ஒரு திட்டம் செயல்படுத்த முடியாது என பகிரங்கமாக அறிவித்தார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பினை பொய்யாக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் நேற்று பத்தாம் வகுப்பிற்கு மொழி பாடங்கள் இரண்டு தாள்களுக்கு பதில் ஒரே தாளாக நடத்தப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளார். 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2020ஆம் ஆண்டு நடைபெறுவதற்கான கால அட்டவணையை 19ஆம் தேதி அன்று அரசு தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டார்.

அந்த தேர்வு அட்டவணையில் பத்தாம் வகுப்பிற்கு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் ஆகியவை இரண்டு தாள்களாக நடத்தப்படும் என அறிவித்திருக்கிறார்.

17/3/2020 மொழித்தாள் 1
19/3/2020 மொழித்தாள் 2
27/3/2020 ஆங்கிலம் தாள் 1
30/3/2020 ஆங்கிலம் தாள் 2

இந்த அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மொழித்தாள்கள் ஒரே தேர்வாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தேர்வு அட்டவணை மாற்றப்படும் என தெரிகிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற பள்ளி கல்வித்துறை இயக்குநர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆறு பாடங்களுக்கு பதில் ஐந்து பாடங்களாக மாற்றுவது குறித்து அரசு தீவிர பரிசீலனை மேற்கொண்டு வருகிறது. மொழிப்பாடம், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் அனைத்து பிரிவுகளுக்கும் கட்டாயமாக இடம் பெறும்.

மேலும் கணிதம், இயற்பியல், வேதியியல் ஒரு பிரிவாகவும், இயற்பியல், வேதியியல், தாவரவியல் ஆகிய பாடங்கள் ஒரு பிரிவாகவும், கம்ப்யூட்டர் அறிவியல், இயற்பியல், வேதியியல் ஒரு பிரிவாகவும் என முக்கிய மூன்று பாடங்கள் சேர்த்து பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பாடங்களை பிரித்து அரசாணை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details