தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சியில் ஓராண்டு நிறைவு - கல்வித்துறையில் முன்னேற்றமா... சறுக்கலா...? - Changes made by the DMK Government

சட்டமன்ற தேர்தலின் போது கல்வியில் எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்திருந்த திமுக , ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் அதனை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் கூட செய்யப்பட வேண்டிய விஷயங்கள் பல இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வித்துறை
கல்வித்துறை

By

Published : May 7, 2022, 2:30 PM IST

சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாள் திமுக அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது கொரோனா பரவலை கட்டுப்படுத்தி மக்களை இயல்பு நிலைக்கு திரும்பச் செய்வது தான். குறிப்பாக கொரோனா தாக்கத்தினால் பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்ததால் மாணவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். பின்னர் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் , கல்வித்துறை , சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளிகளையும் , கல்லூரிகளையும் திறக்க உத்தரவிட்டார். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க தன்னார்வலர்களை கொண்டு இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

உயர்படிப்பில் அரசு பள்ளி மாணவிகளூக்கு ரூ 1000 :பட்ஜெட்டில் அரசுப் பள்ளியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் என அறிவித்தது. மேலும் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு பொறியியல் ,கால்நடை , சட்டம், வேளாண்மை, மீன்வளம் ஆகிய படிப்புகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி மாணவர் சேர்க்கையும் நடத்தி இருக்கிறது.

தேசிய கல்வி கொள்கைக்கு மாறாக மாநில கல்வி கொள்கை :தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் திமுக அரசு தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகிறது. ஆனால் அதே சமயத்தில் மாநிலத்திற்கான தனி கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு ஒன்றை திமுக அரசு அறிவித்துள்ளது. ஆக்குழுவில் அதிக அளவில் கல்வியாளர்கள் சேர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு அளித்த திமுக , தற்போது அவர்களது கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துகிறது.

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாததால் ஏமாற்றத்தில் உள்ளனர். பல பள்ளிகள் , கல்லூரிகளில் தற்போதும் கூட அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் திமுக அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எந்தவித நடவடிக்கையையும் மேற்கொண்டு நியமனங்கள் செய்யவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறையில் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை திமுக அரசு முன்னெடுத்து வந்தாலும், தீர்க்கப்பட வேண்டிய குறைகள் பல இருக்கிறது என்கின்றனர் கல்வியாளர்கள்.

இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு தேர்வு - மகிழ்ச்சியுடன் எழுதுங்கள், மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் அறிவுரை!

ABOUT THE AUTHOR

...view details