சென்னை: பொறியியல் படிப்பில் 2023-24ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் 5ஆம் தேதி முதல் ஜுன் மாதம் 4ஆம் தேதி வரையில் பெறப்பட்டன. பொறியியல் படிப்பில் சேர்வதற்கு 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவர்கள் கட்டணங்களைச் செலுத்தி இருந்தனர்.
ஜூன் 4-ம் தேதி வரை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 மாணவர்கள் அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்திருந்தனர். இந்நிலையில், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் ரேண்டம் எண் வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் ஜூன் 26ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. மேலும், பொறியியல் கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
பி.இ, பி.டெக், பி.ஆர்க் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு தரவரிசைப் பட்டியல் நிர்ணயிப்பதற்கான முறையில் மாற்றம் செய்து உயர் கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் அடிப்படையில்,உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில்,
2023-2024ஆம் ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும்போது 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கிடுவதில் இருந்து விலக்களித்து மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விதி 2007 திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.