தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சி விதிகளில் மாற்றம்…! ஊராட்சி தலைவரின் உரிமை பறிபோகிறதா? - ஊராட்சி தலைவரின் உரிமை பறிபோகிறதா

உள்ளாட்சி அமைப்புகளின் சட்ட விதிகளில் மாற்றும் செய்யப்பட்டிருப்பது ஊராட்சி மன்ற தலைவரின் உரிமையை குறைக்கிறதா என்பது குறித்த தொகுப்பை காணலாம்.

உள்ளாட்சி விதிகளில் மாற்றம்…! ஊராட்சி தலைவரின் உரிமை பறிபோகிறதா?
உள்ளாட்சி விதிகளில் மாற்றம்…! ஊராட்சி தலைவரின் உரிமை பறிபோகிறதா?

By

Published : Jul 23, 2022, 7:48 PM IST

சென்னை:கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே நாடு வளர்ச்சியடையும் என்ற காந்தியடிகளின் கூற்றுப்படி முன்னாள் பிரதமர் நேருவின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டது. இதில் 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்ட 73 அரசியல் அமைப்பு சட்டம் தான் உள்ளாட்சி அமைப்புகள் ஆகும்.

இந்த நாளை தான் பஞ்சாயத் ராஜ் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த 73 அரசியல் அமைப்பு சட்டத்தில் 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல், இடஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களை கொண்டு வந்தனர். நாட்டின் மூன்றாவது அரசாங்கமாக உள்ளாட்சி அமைப்புகள் திகழ்கின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி கிராம ஊராட்சி செயலாளரை நியமித்தல், பணியிடமாற்றம் செய்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவை ஊராட்சியின் செயல் அதிகாரியாக இருக்கும் கிராம ஊராட்சித் தலைவரின் பொறுப்பாக இருந்தது.

2013 ஆம் ஆண்டு அரசு கொண்டு வந்த அரசாணை 72(G.O.Ms.No.72)-ன் படி மாவட்ட அளவிலான நியமனக்குழு மூலம் ஊராட்சி செயலாளர்களின் நியமனங்கள் நடைபெற தொடங்கியது. நிர்வாக ரீதியாக ஊராட்சி செயலாளர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி தலைவரிடமே இருந்தது.

கடந்த மே மாதம் 10ஆம் தேதி ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 104(இடமாற்றம்) மற்றும் 106( தணிக்கும் அதிகாரம்) ஆகிய இரண்டு சட்டப்பிரிவுகளிலும் அரசு சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதில் ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்யும் போது ஊராட்சி தலைவரையோ அல்லது ஊராட்சி மன்றத்தையோ கேட்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஊராட்சிகளின் ஆய்வாளர் அல்லது அரசால் நியமிக்கப்படும் வேறொரு அலுவலரே கிராம ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்வார்.

உள்ளாட்சி விதிகளில் மாற்றம்…! ஊராட்சி தலைவரின் உரிமை பறிபோகிறதா?

ஊராட்சி செயலாளரை மாற்றம் செய்யும்பொழுது ஊராட்சித் தலைவரை கலந்து ஆலோசிக்க கூட தேவையில்லை என சட்ட திருத்தம் கூறுகிறது. பிரிவு 106ன் படி ஊராட்சி செயலாளரை தண்டிக்கும் அதிகாரம் ஊராட்சி தலைவரிடம் இருந்து அரசால் நியமிக்கப்படும் அதிகாரிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் உத்தரவுக்கு ஊராட்சி செயலாளர்கள் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து நம்மிடையே பேசிய நீலகிரி, கெங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முருகன், "சமீபத்தில் அரசு உள்ளாட்சி அமைப்பில் ஒரு சட்டதிருத்தத்தை கொண்டு வந்துள்ளது. ஊராட்சி செயலாளர்களில் அதிகாரத்தை அரசு அதிகாரிகளுக்கே கொடுத்துள்ளது. கிராமசபைக்கும் ஊராட்சி மன்றத்திற்கும் ஊராட்சி செயலாளர் அரசு அதிகாரியாக செயல்படுகிறார்.

உள்ளாட்சி தேர்தல் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடைபெற்றதால் தனிசிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டது. ஊராட்சி செயலாளர்கள் அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செல்வதால் மக்கள் சேவை பாதிக்கப்படுகிறது. இந்த சட்ட திருத்தத்தினால் ஏதாவது ஒரு பிரச்சனைகளில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட நாங்கள் கூறுவதை கேட்பதைவிட அரசு அதிகாரிகள் கூறுவதை கேட்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஊராட்சி செயலாளர்களும் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு அதிகாரிகள் கூறுவதை தான் செய்வார்கள். நாங்கள் கூறுவதை கேட்க மாட்டார்கள். முழு அதிகாரமும் ஊராட்சி மன்றத்திற்கு இருந்தால் மட்டுமே காந்தி கண்ட கனவு நிறைவேறும். ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை மாற்றம் செய்வதால் மக்கள் பணிகள் பாதிக்கப்படும். இந்த பிரிவு 104, 106 சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்" என கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எப்படி நாடாளுமன்றமோ, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எப்படி சட்ட மன்றமோ அதே போன்றுதான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிராமசபை கூட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிராமசபை உறுப்பினர்கள் கிராம ஊராட்சியில் உள்ள வாக்காளர் ஆவார்கள். இந்த அதிகாரத்தில் மாநில அரசு தலையிட்டு சட்ட திருத்தம் கொண்டு வருவது என்பது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அதிகாரம் குறையும் என்று கூறப்படுகிறது.

இந்த சட்டதிருத்தம் அதிகார பரவலுக்கு எதிரானது எனவும் மொத்த அதிகாரமும் அரசு அதிகாரிகளிடம் செல்வதால் மக்கள் பணி பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து நம்மிடையே ஊரக உள்ளாட்சி முகமையின் மாவட்ட திட்ட இயக்குநர் கூறுகையில், "104, 106 சட்ட திருத்தம் ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரத்தை குறைக்காது. ஊராட்சி செயலாளர் சரியாக செயல்படவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஊராட்சி தலைவர் பரிந்துரை செய்யலாம்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காலகட்டத்தில் தனி அதிகாரி செயல்பட்டது போல செயலாளரை மாற்றம் செய்யவோ அல்லது தண்டிக்கவோ தனி ஆய்வாளர் நியமிக்கப்படுவார். கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர் பணிக்கு இடம் காலியாக உள்ள போது ஊராட்சி தலைவர் தனது வேண்டிய உறவினரை அப்பதவியில் அமர்த்துகிறார். இதனால் தான் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தனி ஆய்வாளர் கீழ் ஊராட்சி செயலாளரை கொண்டு வரும் போது அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது" என கூறினார்.

ஊராட்சி மன்ற தலைவர் தரப்பில் எங்களின் உரிமை குறைகிறது எனவும் அரசு அதிகாரிகள் தரப்பில் அனைவருக்குமான வேலைவாய்ப்பாக அமையும் எனவும் கூறுகின்றனர். இரண்டு தரப்பினரின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்றால் ஊராட்சி செயலாளர் பணிக்கு எழுத்து தேர்வு முறையை கொண்டு வந்தால் தான் தீர்வு கிடைக்கும் என்பது பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.

இதையும் படிங்க:ஆர்.பி. உதயகுமாருக்கு எதிர்கட்சி துணை தலைவர் பதவி! தென்மாவட்டங்களை சரி செய்ய ஈபிஎஸ் முயற்சியா?

ABOUT THE AUTHOR

...view details