வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அப்போது காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மழை பெய்யாத இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பசலனம் காரணமாக தமிழ்நாட்டில் மழை! - வானிலை
சென்னை: வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்துவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 37 மற்றும் 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள மாலை நான்கு மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமெனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோத்தகிரியில் 4 சென்டிமீட்டரும், பெருஞ்சாணி, நாமக்கல்லில் 3 சென்டிமீட்டரும், கயத்தாறில் 2 சென்டிமீட்டரும், மானாமதுரை, உதகை 1 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.