சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வருகின்ற 14ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் என்றும், காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று (நவ.11) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் நாளை (நவ.12) மற்றும் நாளை மறுநாள் (நவ.13) ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனைத்தொடர்ந்து வரும் அடுதெடுத்த நாட்களில், அதாவது நவம்பர் 17ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 செல்சியசாகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியசாகவும் இருக்கக்கூடும்.