வெப்பச் சலனம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பிற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகியப் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த உச்ச உயர் தீவிர புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன் தினம் (மே.17) இரவு டையூவுக்கு 20 கிலோமீட்டர் வடகிழக்கு திசையில் சௌராஷ்டிரா கரையை கடந்தது.
தற்போது சௌராஷ்டிரா பகுதியில் வலுவிழந்து தீவிர புயலாக நிலைகொண்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக நேற்று (மே.18) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
இன்று (மே.19) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
20, 21 ஆகிய தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.