சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - Chance of rain in 16 districts
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 7 மணி அளவில் ஆந்திர கடற்கரை அருகே கரையைக் கடந்தது. தற்போது கடலோர ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், சேலம், கோயம்புத்தூர், நீலகிரி கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை வால்பாறை பகுதியில் 11 சென்டி மீட்டர் மழையும், கோவை சின்னக்கல்லார், சோலையார், நடுவட்டம் ஆகிய பகுதிகளில் 8 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி அவலாஞ்சி, கோவை சின்கோனா ஆகிய பகுதிகளில் தலா 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை பொருத்தவரை அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளிலும் கேரள மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளிலும் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.