சென்னை:இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நேற்று (அக் 22) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக் 23) காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று 8.30 மணியளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை, வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து வரும் 25, 26 மற்றும் 27ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.