சென்னை: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நாளை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் உடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
டிசம்பர் 9ஆம் தேதி அன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 - 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 - 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
வடகிழக்கு பருவமழை: கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் பெய்த மழை அளவு 37 செ.மீ ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு என்பது 38 செ.மீ ஆகும். இது இயல்பை விட 3 சதவீதம் குறைவு எனக் கூறப்படுகிறது.