தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! - மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

By

Published : Dec 3, 2022, 2:23 PM IST

சென்னை:வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும்.

மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதி வடதமிழகம்- புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(டிச.3) ஒருசில இடங்களிலும், வடக்கு உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை(டிச.4) ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிச.5ஆம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிச.6ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிச.7ஆம் தேதி ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை : அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:டிச.4ஆம் தேதி அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிச.5ஆம் தேதி அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிச.6ஆம் தேதி அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிச.7ஆம் தேதி மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இலங்கை கடலோர பகுதிகள் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க:யானைகள் வழித்தடத்தில் செங்கல் சூளை; மாசுகட்டுப்பாட்டு வாரியம் மீது நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை..!

ABOUT THE AUTHOR

...view details