தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் வகுப்பு மதிப்பெண் நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி! - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: 10ஆம் வகுப்பு மதிப்பெண் நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Challenging public exam marks calculation, petition dismissed, MHC order
Challenging public exam marks calculation, petition dismissed, MHC order

By

Published : Aug 25, 2020, 6:12 PM IST

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இதையடுத்து, மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 விழுக்காடு மதிப்பெண்களும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 விழுக்காடு மதிப்பெண்களும் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்த நடைமுறையை ரத்து செய்யக் கோரி, முகமது ஹுமாயூன் உள்பட எட்டு மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், புதிய பாடத்திட்டத்தின் கீழ் படித்த தங்களால், அரையாண்டு தேர்வுக்குப் பிறகே அதை புரிந்து கொள்ள முடிந்தது. தேர்வு நடைமுறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் வாதிடப்பட்டது.

மேலும், மார்ச் மாதத்துக்கு முன் நடத்திய திருப்புதல் (revision) தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிட உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு தேர்வில் அனைவரும் வெற்றி என அறிவிக்கப்பட்டு, மதிப்பெண்கள் கணக்கிட்டு, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது. தற்போதைய நிலையில் நீதிமன்றம் தலையிட்டால், அது மாணவர்களின் மேல்நிலை படிப்புகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்கள் நலன் கருதி, அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கரோனா காலத்தில் மாணவர்கள் நலன் கருதி அரசு எடுத்துள்ள கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details