சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து, கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளியில் கலவரம் வெடித்தது. பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன.
கலவரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக்குழு, பலரை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்து, தனது கணவரை விடுவிக்க கோரி, அவரது மனைவி தமிழ்ப்பிரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது கணவர் எந்த கலவரத்தையும் தூண்டாத நிலையில், இந்த ஒரே ஒரு வழக்கை மட்டும் வைத்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.