தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேதா நிலையத்தின் நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - வேதா நிலையம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தின் நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்தும், அதற்கு இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Challenging conversion of Jayalalitha memorial, orders reserved, MHC
வேதா நிலையத்தின் நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

By

Published : Apr 3, 2021, 3:24 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் திட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவெடுத்து அதை கையகப்படுத்தி, அதற்கான தொகையை அமர்வு நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது.

வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ. தீபக் வழக்கு தொடர்ந்தார். வீட்டிற்கு ரூ. 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகபடுத்துதல் அலுவலர் செலுத்தியதை எதிர்த்து ஜெ. தீபா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. தீபா, தீபக் தரப்பில் ஜெயலலிதாவிற்கு ரத்த முறை நேரடி வாரிசுகள் இல்லாததால், அவரது அண்ணன் பிள்ளைகளான தங்களை வாரிசுகளாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும், அவர் வாழ்ந்த இடத்தை புனிதமாக கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் நிலம் கையகப்படுத்தபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நிலத்தை கையகப்படுத்த ஒப்புதலே தெரிவிக்காத நிலையில், அந்த நிலத்தை மதிப்பீடு செய்தும், அசையும் சொத்துக்களை முறையாக மதிப்பீடு செய்யாமலும் ரூ. 68 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

தமிழ்நாடு அரசு தரப்பில் வேதா நிலையத்தை கையகபடுத்தும் முன்பே அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கையை கண்டிப்பாக பாராட்டி இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஒருவர் குடியிருந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற சுற்றுச்சூழல் சான்றிதழ் எதுவும் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஷேசாயி இருவரின் வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க:அமித்ஷாவை வரவேற்க எம்ஜிஆர், ஜெயலலிதா பாடல்கள் - காணாமல் போன அதிமுக கொடி!

ABOUT THE AUTHOR

...view details