தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எனக்கு 18 உனக்கு 38.. சொகுசு வாழ்க்கைக்காக பலே திருட்டு.. காதல் ஜோடி சிறைக்கு சென்றது எப்படி? - மூதாட்டியிடம் நகை பறிப்பு

ஆடம்பர வாழ்க்கை வாழ செயின் பறிப்பில் ஈடுபட்ட 38 வயது பெண்ணும், 18 வயது இளைஞரையும் கோடம்பாக்கம் ஆட்டோ ஓட்டுநர்கள் துரத்திப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 22, 2023, 10:45 PM IST

செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை துரத்திப் பிடித்த ஆட்டோ ஒட்டுநர்கள்

சென்னை: கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி கனிகா (58). இவர், வெள்ளிக்கிழமை மதிய வேளையில் தனது வீட்டின் அருகே காய்கறிகளை வாங்கிக் கொண்டு டெய்லர்ஸ் எஸ்டேட் இரண்டாவது தெரு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர் திடீரென கனிகாவிடம் இருந்து செயினை பறித்துக் கொண்டு ஓடினார்.

செயினை பறித்துக் கொண்டு ஓடும் போது மூதாட்டி கனிகா கூச்சலிட்டதை அடுத்து, தெருவில் உள்ளவர்கள் அக்கம்பக்கத்தினர் செயின் பறிப்பு கொள்ளையனை விரட்டி பிடிக்க ஓடினர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஒடிச் சென்ற இளைஞர் கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே குடியிருப்புக்குள் புகுந்து தப்ப முயன்றார்.

அப்போது அங்கிருக்கும் ஆட்டோக்காரர்கள் இளைஞரை சுற்றி வளைத்தனர். அப்போது அருகில் இருக்கும் குடியிருப்பில் மறைந்திருந்த இளைஞரை ஆட்டோக்காரர்கள் பிடித்தனர். இளைஞரை துரத்திப் பிடிக்கும்போது 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் திருடன் திருடன் என கூறி அவனை பிடிக்குமாறு ஓடிவந்தார். அதன்பின் ஆட்டோக்காரர்கள் இளைஞரை மடக்கிப் பிடித்தவுடன் இளைஞரிடம் இருந்த நகையை எங்கே என கேட்டு அவரது உடமைகளை ஆய்வு செய்தனர்.

அதற்குள், இளைஞரை பிடிக்குமாறு கூறி பின் தொடர்ந்து வந்த அந்த 38 வயதான பெண், இளைஞர் பாவம் அவரை விட்டுவிடுமாறு ஆட்டோகாரர்களிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோக்காரர்கள், ஏம்மா நீயும் தான திருடன் பிடிங்கனு ஓடி வந்த இபோ ஏ இப்படி சொல்லுற’ என கேட்டுள்ளனர். அதற்கு பதட்டத்தோடு அந்த பெண் பதில் கூறியிருக்கிறார். இதனால், சந்தேகமடைந்த ஆட்டோக்காரர்கள், இருவரையும் பிடித்து வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, இளைஞர் அந்த பெண் தனது அண்ணி என கூறினார். மேலும், தானும் தனது அண்ணியும் வயிற்றுப் பசிக்காக திருடியதாக கண்ணீர் விட்டு கதறியுள்ளார். இந்த ட்விஸ்ட்டை சற்றும் எதிர்பார்காத ஆட்டோக்காரர்கள், அவர்களிடம் இருந்த நகையை மிரட்டி கேட்டவுடன், மூதாட்டியிடம் இருந்து பறித்த இரண்டு சவரன் நகையில் ஒரு சவரன் நகை மட்டுமே அவர்களிடம் இருந்து ஆட்டோக்காரர்கள் மீட்டனர்.

அதன்பின் கோடம்பாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். காவல் துறை விசாரணையில், அவர்கள் பல்லாவரத்தைச் சேர்ந்த அக்பர் பாட்ஷா (18) மற்றும் பர்வீன் பாத்திமா (38) என்பது தெரியவந்தது. இருவரும் பல்லாவரத்தில் பிரபல ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மூன்று வருடத்திற்கு முன்பாக இன்ஸ்டாகிராம் மூலமாக இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்த திருநெல்வேலியைச் சேர்ந்த பர்வீன் பாத்திமா, அக்பர் பாட்ஷாவுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதற்காக செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், திருநெல்வேலியில் இருக்கும் தனது இரண்டு குழந்தைகளுக்கு செலவு செய்யவும், தான் சென்னையில் தங்கி வாழ்வதற்கும் பணத்தேவை ஏற்பட்டதால் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதாக வாக்குமூலம் தெரிவித்தார். தங்களது பணத் தேவைக்காக இருவரும் திட்டம் தீட்டி, நூதன முறையில் திட்டம் தீட்டி செயின் பறிப்பு சம்பவங்களில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக அக்பர் பாட்ஷாவிற்கு 18 வயதும், பர்வீன் பாத்திமாவிற்கு 38 வயதும் இருக்கிற காரணத்தினால், சந்தேகம் ஏற்படாதவாறு ஜோடியாக செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். அண்ணி - கொழுந்தனார் போன்றும் அக்கா - தம்பி போன்றும் அம்மா - பையன் போன்று பல்வேறு விதமாக நாடகம் ஆடி வலம் வந்து செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இவர்கள் மீது அசோக் நகர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பு வழக்குகள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலில் யாரும் இல்லா தெருக்களில் சந்தேகம் வராதபடி பர்வீன் பாத்திமா நோட்டமிட்டு காத்திருப்பதாகவும், அதன் பின் மூதாட்டிகள் யாரேனும் நகையுடன் வந்தால் குறி வைத்து அக்பர் பாட்ஷா பர்வீன் பாத்திமாவிற்கு சிக்னல் கொடுத்துவிட்டு செயினை பறித்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக விசாரணையில் அக்பர் பாட்ஷா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தப்பித்து ஓடும்போது திருடனை பிடிப்பது போல் வேண்டுமென்றே பர்வீன் பாத்திமா கூச்சலிட்டபடி துரத்துவது போன்று ஓடுவதும், யாரேனும் பிடிக்க வந்தால் அவர்களை திசை திருப்பி, அக்பர் பாஷாவை தப்ப வைப்பதுமாக செய்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், செயினை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவது போன்று நடித்தும் காவல் துறையினர் செல்லாமல் காலம் தாழ்த்தி அக்பர் பாஷாவை தப்பிக்க வைத்து தானும் தப்பிச் செல்வதுமாக இருந்தது விசாரணையில் அம்பலமானது.

மேலும் ரயில் நிலையங்கள் அருகில் இருக்கும் தெருக்களில் மட்டுமே இது போன்று நாடகம் ஆடி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு, ரயிலில் ஏறிக்கொண்டு தப்பிச் செல்வதே தங்களது திட்டம் என அக்பர் பாட்ஷா வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வாறாக கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் உள்ளே புகுந்து ரயிலில் ஏறி தப்பிக்கும்போது தான், ரயில் நிலையம் அருகில் இருந்த அப்துல் கலாம் ஆட்டோ நிறுத்தத்தைச் சேர்ந்த ஆட்டோக்காரர்கள் அக்பர் பாட்ஷாவை பிடித்ததும் தெரியவந்துள்ளது.

இவ்வாறாக பல்வேறு விதமாக நாடகமாடி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இருவரிடமும் விசாரணை நடத்திய பிறகு கோடம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:24 மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: திருவண்ணாமலையில் ஆசிரியர் கைது!

ABOUT THE AUTHOR

...view details