தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வேளாண் படிப்புகள் தொடங்க தடையில்லா சான்றிதழ் கட்டாயம்' - நீதிமன்றத்தில் அரசு திட்டவட்டம்! - தடையில்லா சான்றிதழ்

சென்னை: வேளாண் சார்ந்த படிப்புகள் தொடங்க தமிழ்நாடு அரசின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம் எனத் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

hc
hc

By

Published : Oct 6, 2020, 7:11 PM IST

தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வேளாண் படிப்புகள் தொடங்க, தமிழ்நாடு அரசின் தடையில்லா சான்று பெற வேண்டும் எனக் கடந்த ஜூலை மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசின் தடையில்லா சான்று பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது எனவும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து காருண்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆகிய கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டிருந்தன.

அதில், "வேளாண் படிப்புகள் தொடங்க பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியே போதும். தமிழ்நாடு அரசினுடைய தடையில்லா சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை என்பதால் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்குத் தடைவிதிக்க வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு சார்பில் முன்னிலையான அரசின் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், "வேளாண்மை என்பது மாநிலப் பட்டியலுக்குள்பட்டது என்பதால் வேளாண் சார்ந்த படிப்புகள் தொடங்க கல்லூரிகளாக இருந்தாலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக இருந்தாலும் 110 ஏக்கர் இடம் வைத்திருக்க வேண்டும். அரசின் விதிகளைப் பின்பற்றினால்தான் தடையில்லா சான்று வழங்க முடியும்" எனத் தெரிவித்தார்.

எனினும், இதுவரை படித்து முடித்த மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாது எனவும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் வேளாண் படிப்புகளுக்கு இனி புதிதாக மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கக் கூடாது எனவும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களைத் தொடர்ந்து, அனைத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், இந்தாண்டு வேளாண் படிப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கைகள், வழக்குகளின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details