இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சான்றிதழ்களை வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவ கல்வி இயக்ககத்தின் அறிவுறுத்தலின்படி 6ஆம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தலைமை ஆசிரியர்கள் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். ஒரு மாணவர் 6, 7, 8 வகுப்புகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அல்லது அரசு நடுநிலைப் பள்ளியிலும், 9 ,10 வகுப்புகள் அரசு உயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளியிலும், 11, 12ஆம் வகுப்பு அரசு மேல் நிலை பள்ளியிலும் பெற்றவராக இருக்கலாம்.
6 முதல் 10ஆம் வகுப்புகளில் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் 11, 12ஆம் வகுப்பு அரசு மேல்நிலை பள்ளியில் பயின்று இருக்கலாம். 6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஒரே அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படித்திருக்கலாம்.