இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 30ஆம் தேதி சீனாவிலிருந்து வந்த மாணவர் மூலமாக முதல் தொற்று ஆரம்பமானது. அதற்கு பிறகு படிப்படியாக அது பரவத்தொடங்கியது. கரோனா நோய் என்பது ஒரு கொடிய தொற்றுநோய் என்பதை உணராமல் பிரதமர் மோடி பிப்ரவரி 24ஆம் தேதி அகமதாபாத் விளையாட்டு மைதானத்தில் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, ‘நமஸ்தே டிரம்ப்’ வரவேற்பு மடலை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது கரோனா நோயின் அச்சம் அமெரிக்கா அதிபருக்கோ, இந்திய பிரதமருக்கோ இல்லாததன் விளைவைத்தான் அமெரிக்க, இந்திய மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 26 மாநிலங்களுக்கு ரூபாய் 11,051 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது மத்திய அரசு. இந்த நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்குவதில் கடுமையான பாரபட்சம் பாஜக அரசால் காட்டப்பட்டிருக்கிறது. கரோனா நோயினால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூபாய் 1,611 கோடி ஒதுக்கியிருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு ரூபாய் 510 கோடி ஒதுக்கியிருக்கிறது.
ஆனால் குறைவான பாதிப்புள்ள உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 966 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூபாய் 910 கோடி, பிகாருக்கு ரூபாய் 708 கோடி, குஜராத்துக்கு ரூபாய் 662 கோடி, ஆனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிற கேரளாவிற்கு ரூபாய் 157 கோடி தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பாஜக அரசின் அப்பட்டமான பாரபட்சமான போக்கைப் புரிந்துகொள்ளலாம்.