சென்னை:தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழையால் காவிரி டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது நிவாரணம் அறிவித்துள்ளார். இருப்பினும், நெல் கொள்முதல் தொடர்பான வழிகாட்டுதல்களில் கூடுதல் தளர்வு அதாவது 22 சதவீதம் ஈரப்பதமுள்ள நெல்லையும், கொள்முதல் செய்வதற்கான அனுமதியை வழங்கும் படியும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்.
இதன் அடிப்படையில், மத்திய உணவுத்துறை செயலருக்குத் தமிழ்நாடு உணவுத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணனும் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் மழை பாதிப்பை ஆய்வு செய்ய ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. சென்னையில் உள்ள தரக் கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி சி.யூனுஸ், பெங்களூருவில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன் மற்றும் ஓய்.போயா ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.