தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைமைச் செயலாளர் உடன் மத்திய குழு ஆலோசனை.. 2 நாட்கள் இரண்டு பிரிவாக மிக்ஜாம் புயல் பாதிப்புகள் ஆய்வு! - சென்னை வெள்ளம்

Central Team: மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை, சென்னை வந்துள்ள மத்திய குழு இரண்டு நாட்கள் ஆய்வு செய்கிறது.

மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு இன்று தொடக்கம்
மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு இன்று தொடக்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 1:29 PM IST

மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு இன்று தொடக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை கடந்த டிச.4ஆம் தேதி புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் (MICHAUNG), டிச.5ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம் பாபட்லா அருகே கரையைக் கடந்தது. சென்னையைப் பொறுத்தவரை வடசென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் பாதிப்புகள் என்பது 2015ஆம் ஆண்டைவிட சற்று மோசமாக இருந்தது. இதே நிலைமைதான் மற்ற மாவட்டங்களிலும் காணப்பட்டது.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களை ஆய்வு செய்வதற்காக, கடந்த டிசம்பர் 7ஆம் தேதி சென்னை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். அதற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படுவதாக கூறினார்.

இந்நிலையில் வெள்ள சேதங்களை சீரமைக்க இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி வழங்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மேலும், நிவாரணத் தொகையை விரைந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டிருந்த நிலையில், மாநில பேரிடர் நிதியாக 450 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு வழங்க பிரதமர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, மத்திய தொழில் முனைவோர் மற்றும் நீர்வளத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று சென்னைக்கு வந்து, மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம், செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர், மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில், மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட மத்திய குழுவினர், டெல்லியில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். மேலும் இரண்டு நாள் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு மேற்கொள்ளவுள்ள மத்தியக் குழு, எண்ணூர் எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

இந்த மத்திய குழுவில்
1) குணால் சத்யார்த்தி (தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) ஆலோசகர்)
2) திமான் சிங், (ஊரக வளர்ச்சி அமைச்சகம் )
3) டாக்டர்.ஏ.கே.சிவ்ஹரே (வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை இணை இயக்குநர்)
4) விஜயகுமார் (சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை)
5. பவ்யா பாண்டே
6. ரங்நாத் ஆடம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள மத்தியக் குழு, இன்று காலை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 11.30 மணி முதல் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு குழுக்களாக பிரிந்து கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு குழு - North Team:காலை 11.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை Demellows சாலை சந்திப்பு, பட்டாளம் - அங்காளம்மன் கோயில் தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, சிவராவ் சாலை, மோதிலார் தெரு, ஸ்டீபன்சன் பாலம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

பிற்பகல் 01.30 மணி முதல் மாலை 03.30 மணி வரைவட பெரும்பாக்கம் - வட பெரும்பாக்கம் கால்வாய், வட பெரும்பாக்கம் சாலை, கொசப்பூர், குளக்கரை, பர்மா நகர் இருளர் காலனி, மணலி - திடீர் நகர், பாலசுப்பிரமணியம் நகர், எம்.ஜி.ஆர் தெரு, பலராமன் தெரு, சிபிசிஎல் நகர், கலைஞர் நகர், MFL எதிரில், ஜகதாம்பாள் நகர், திருவொற்றியூர் - மணலி பிரதான சாலை, சடையன்குப்பம், நெட்டுகுப்பம் முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்கின்றனர்.

தெற்கு குழு - South Team:காலை 11.30 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை வேளச்சேரி - ஏஜிஎஸ் காலனி, ராம் நகர், விஜிபி செல்வா நகர், புவனேஷ்வரி நகர், மடிப்பாக்கம் - குபேரன் நகர் 8வது தெரு, காமாட்சி மருத்துவமனை ரேடியல் சாலை சந்திப்பு, சாய் பாலாஜி நகர், நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை சிவன் கோயில் அருகில் தாம்பரம் - வேளச்சேரி நெடுஞ்சாலை, பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை, மேடவாக்கம் Tank போன்ற பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, பிற்பகல் 02.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பெரும்பாக்கம் - Elcot IT Park, செம்மொழி சாலை, ஒக்கியம் மடு - காரப்பாக்கம் பாலம், செம்மஞ்சேரி நூகாம்பாளையம் பிரதான சாலை, காந்தி நகர், தையூர் - ராஜிவ் காந்தி சாலை - மாமல்லபுரம் சாலை கண்டிகை - கேளம்பாக்கம் - மாம்பாக்கம் - வண்டலூர் சாலை ஆகிய பகுதிகளிலும் ஆய்வு செய்யவுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் மத்திய குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்கிறது.

இதையும் படிங்க:விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் மருத்துவ முகாம்கள்!

ABOUT THE AUTHOR

...view details