சென்னை:சென்னையிலிருந்து சட்டவிரோதமாக யானை தந்தங்கள் கடத்தி செல்லப்பட்டு விற்கப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் தனிப்படை அமைத்து யானை தந்தம் கடத்தும் கும்பலை கூண்டோடு பிடிக்க கடந்த இரண்டு மாதங்களாக திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக யானை தந்தம் வாங்கும் தரகர் போல நடித்து, கடத்தும் கும்பலிடம் விலைபேசி உள்ளனர். ஒரு ஜோடி தந்தம் 20 லட்சம் ரூபாய் என கூறிய கும்பலிடம், 18 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி யானை தந்தத்தை எடுத்துக் கொண்டு தியாகராயநகர் பகுதிக்கு வரும்படி கூறியுள்ளனர்.
இதையடுத்து கடந்த 4ஆம் தேதி இரவு, ஆட்டோவில் யானை தந்தத்துடன் தியாகராயநகர் வந்த 6 பேர் கொண்ட கடத்தல் கும்பலை மறைந்திருந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் கடத்தி வரப்பட்ட ஒரு ஜோடி யானை தந்தத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஒரு ஜோடி யானை தந்தத்தின் சர்வதேச சந்தை மதிப்பு 7.19 கோடி ரூபாய் என தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், யானை தந்தம் கடத்திய நபர் ராஜா அண்ணாமலை புரத்தை சேர்ந்த குமரன்(39) மற்றும் தரகர்களான கர்நாடகாவை சேர்ந்த சீனிவாசன், சேலத்தை சேர்ந்த குமார், பார்த்தசாரதி, தமிழ்வாணன், விக்னேஷ், மகேந்திரன் ஆகிய ஏழு பேர் என்பது தெரியவந்தது.
கைதான ராஜா அண்ணாமலை புரத்தை சேர்ந்த குமரன் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு நண்பருடன் இணைந்து வீட்டு கதவு விற்கும் கடையை நடத்தி வந்துள்ளார். அதன் பிறகு குமரனின் நண்பர் இறந்துவிடவே தொழிலில் நஷ்டம் அடைந்ததால் கடையிலிருந்த பொருட்களை குமரன் விற்க முடிவு செய்துள்ளார். அப்போது, கடையில் இருந்த ஒரு பையில் ஒரு ஜோடி யானை தந்தம் இருப்பதை கண்ட குமரன் அதிர்ச்சியடைந்து, அவரது நண்பர் பார்த்தசாரதியிடம் தெரிவித்துள்ளார்.