சென்னை: 2022ஆம் ஆண்டுக்கான இந்தியாவில் உள்ள மாசடைந்த ஆறுகளின் அறிக்கையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 311 மாசடைந்த ஆறுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த 311 ஆறுகளில் 4,000க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயாலஜிக்கல் ஆக்சிஜன் டிமாண்ட் (Biochemical Oxygen Demand) என்ற ஆய்வு முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ஒரு நதியில் இருந்து எடுக்கப்படும் 1 லிட்டர் தண்ணீர் தூய்மையான தண்ணீராக மாற தேவைப்படும் ஆக்சிஜனின் அளவைப் பொறுத்து BOD கணக்கீடு செய்யப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, ஒரு ஆற்றில் எடுக்கப்படும் தண்ணீரில் தூய்மையான தண்ணீராக மாற குறைந்த அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டால், அந்த ஆறு குறைவாக மாசடைந்து உள்ளதாக கருதப்படும். அதேநேரம் மிக அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டால், அதிகமாக மாசடைந்து உள்ளதாக எடுத்துக் கொள்ளப்படும்.