தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர் கல்வித் துறை பணி நியமனத்தில் பாரபட்சம் - திருமாவளவன் எம்பி!

பட்டியலினத்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் உரிய எண்ணிக்கையில் உயர்கல்வித் துறையில் பணி நியமனம் வழங்குவதற்கு, சிறப்பு பணியமர்த்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என, மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருமாவளவன்
திருமாவளவன்

By

Published : Jun 14, 2021, 9:16 PM IST

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் இன்று (ஜூன் 14) அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

அதில்,’உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த ஆண்டறிக்கையை ஒன்றிய அரசு, ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, 2019-20-க்கான ஆண்டறிக்கை தற்போது வெளிவந்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது, உயர் கல்வித்துறை ஆசிரியர் நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இஸ்லாமியர்களுடைய பங்கேற்பு குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பணி நியமன விவரம்

இந்தியாவில் மொத்தமுள்ள 14,73,255 ஆசிரியர் பணியிடங்களில், எஸ்.சி. பிரிவினர் 7.1விழுக்காடு, எஸ்டி பிரிவினர் 2.1 விழுக்காடு, இஸ்லாமியர்கள் 3.2 விழுக்காடு இருப்பது தெரியவந்தது.

தற்போது வெளியாகியிருக்கும் அறிக்கையில், இந்தியா முழுவதும் உயர் கல்வித்துறையில் 15,03,156 பேர் ஆசிரியர்களாகப் பணிபுரிவது தெரியவந்துள்ளது.

அதில், எஸ்.சி. பிரிவினர் 9 விழுக்காடு, எஸ்.டி. பிரிவினர் 2.4 விழுக்காடு, இஸ்லாமியர்கள் 5.6 விழுக்காடு உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் எஸ்.சி. பிரிவினர் 16.6 விழுக்காடும், எஸ்.டி. பிரிவினர் 8.6 விழுக்காடும் உள்ளனர்.

அதுபோல இஸ்லாமியர்கள் 14.2 விழுக்காடு உள்ளனர். இந்திய அளவில் எஸ்.சி. பிரிவினருக்கு 15 விழுக்காடு, எஸ்.டி. பிரிவினருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது வெளியாகியிருக்கும் ஆண்டறிக்கையில் கண்டுள்ள புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, எஸ்.சி-எஸ்.டி பிரிவினருக்கு உறுதியளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு உயர்கல்வித் துறையில் பெருமளவில் புறக்கணிக்கப்படுவதை அறிய முடிகிறது.

இது அம்மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும். அதுபோலவே, மக்கள் தொகையில் 14.2% இருக்கும் இஸ்லாமியர்கள் உயர் கல்வித் துறை ஆசிரியர் பணிகளில், தமது மக்கள் தொகை விகிதத்தில் பாதியளவு கூட பிரதிநிதித்துவத்தைப் பெற முடியவில்லை என்பது தெரிகிறது.

ஒன்றிய அரசு எஸ்.சி-எஸ்.டி மக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் உரிமைகளை வழங்குவதில், அக்கறையற்ற அரசாக இருக்கிறது என்பதற்கு இந்த ஆண்டறிக்கை ஒரு சான்றாகும்.

இந்த அநீதிகளைக் களைந்து, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இஸ்லாமியர்களுக்கு உரிய எண்ணிக்கையில், உயர்கல்வித் துறையில் பணி நியமனம் வழங்குவதற்கு சிறப்பு பணியமர்த்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்’ எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உலக ரத்த கொடையாளர்கள் தினம்: ரத்த தானம் வழங்கிய மா. சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details