தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 9, 2020, 10:40 AM IST

ETV Bharat / state

மின்சாரத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசு -டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: மின்சாரத்தைத் தனியாருக்கு தாரை வார்க்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தால் மக்கள் மீண்டும் பாதிக்கப்படுவார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv dinakaran
ttv dinakaran

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் மின் பகிர்மானத்தை மொத்தமாக தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் மத்திய அரசு முன்மொழிந்திருக்கும் ‘மின்சார திருத்தச் சட்டம்' 2020ஆம் ஆண்டுக்கான வரைவை சட்டமாக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். கரோனா பாதிப்பில் இருந்தே இந்தியா இன்னும் மீண்டு வராத ஊரடங்கு நேரத்தில், இப்படியொரு சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களின் கருத்துக் கேட்புக்கு அனுப்பியது ஏற்புடையதல்ல.

இச்சட்டத்திருத்தத்தின் மூலம் மின் உற்பத்தி, பகிர்மானம் ஆகியவை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம், வீடுகளுக்கு கட்டணமில்லாமல் அளிக்கப்படும் முதல் 100 யூனிட் மின்சாரம் ஆகியவற்றுக்கு ஆபத்து ஏற்படும். அதுமட்டுமின்றி பெட்ரோல், டீசல் விலை உயர்வைப்போல எந்தக் கட்டுப்பாடும் அரசிடம் இல்லாமல், மின் கட்டணமும் அடிக்கடி உயர்ந்துகொண்டே இருக்கும். எனவே, மின்சார சட்டத்திருத்தத்தைக் கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

தற்போது, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குப் பொதுவான ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) உள்ள மின்சாரத்தை, மாநிலங்களின் ஒப்புதல் பெறாமலேயே மொத்தமாக மத்திய அரசு கையில் எடுத்து சட்டம் நிறைவேற்றி தனியாரிடம் ஒப்படைக்க முனைவது கூட்டாட்சி முறைக்கு எதிரானதாகும். எனவே, முதலமைச்சர் பழனிசாமி அரசு இச்சட்டத்திருத்த முன்வரைவை ஏற்கவே கூடாது. இதுபோன்றே 2003ஆம் ஆண்டில் திமுக அங்கம் வகித்த வாஜ்பாய் அரசு கொண்டுவந்த 'மின்சார சட்டம் 2003' ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து நாடு மீண்டு வரவே கிட்டதட்ட 10 ஆண்டுகள் தேவைப்பட்டன.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் மக்களைப் பாதிக்கும் இதுபோன்ற எத்தனையோ திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் ஆதரவளித்து நிறைவேற்றிய பாதகத்தைச் செய்த திமுகதான், அனைத்துத் தரப்பினரையும் மின்வெட்டால் கடும் பாதிப்புக்கு ஆளாக்கியச் சட்டம் வருவதற்கும் காரணமாக இருந்தது. தற்போதைய சட்ட வரைவு ஏழைகளைப் பாதிக்கும் என்று போலிக்கண்ணீர் வடித்திருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருக்குமானால், தங்களிடம் இருக்கும் எம்.பிக்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இந்த மின்சார திருத்தச் சட்டம் நிறைவேறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:மது குடித்தால் கரோனாவா? - உலக சுகாதார அமைப்பு விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details