41ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று (ஆக. 27) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார், கூடுதல் தலைமைச் செயலர், நிதி மற்றும் முதன்மைச் செயலர், வணிகவரி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்றைய கூட்டம் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீடு குறித்து விவாதிக்கப்படுவதற்கென மட்டுமே கூட்டப்பட்டிருந்தது. அதில், ”2018-19ஆம் ஆண்டிற்கு மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான 553.01 கோடி ரூபாய், 2019-20ஆம் ஆண்டிற்கு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான 246.56 கோடி ரூபாய், 2020-21ஆம் ஆண்டிற்கு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான 11,459.37 கோடி ரூபாய், ஆக மொத்தம் 12,258.94 கோடி ரூபாயை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும்” என மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்றைய கூட்டத்தில் வலியுறுத்தினார்.
மேலும், 2017-18ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஐஜிஎஸ்டி நிலுவைத் தொகையான 4,073 கோடி ரூபாயையும் விரைந்து வழங்கிட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
”சரக்குகள் மற்றும் சேவை வரி முறையினை அமல்படுத்திடும் பொருட்டு, மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பினை மத்திய அரசு ஈடு செய்ய முன்வந்ததைத் தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு சரக்குகள் மற்றும் சேவைகள் (மாநிலங்களுக்கான இழப்பீடு) சட்டமானது மத்திய அரசால் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, 2015-16ஆம் நிதியாண்டினை அடிப்படை ஆண்டாகக் கொண்டு 14 சதவிகிதம் வளர்ச்சி விகிதத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசானது இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.