தமிழ்நாடு

tamil nadu

மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள காலி இடங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்திடுக...!

By

Published : Nov 25, 2022, 8:33 PM IST

மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை, மத்திய அரசு மீண்டும் தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

doctor
doctor

சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலளார் ரவீந்தரநாத், "வெளிநாட்டில் மருத்துவம் படித்து முடித்த 800-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவராக பணி புரிவதற்காக காத்திருக்கின்றனர். தற்பொழுது அதற்கான அரசணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. பயிற்சி மருத்துவம் மேற்கொள்ள உள்ள வெளிநாட்டில் படித்த இந்த மாணவர்களுக்கு, விடுதி வசதிகளை வழங்கிட வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை, முழுமையான வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, நேர்மையான முறையில் நடத்திடவும், வாக்குச்சீட்டு முறையில் வாக்களிக்கும் முறையை ரத்து செய்துவிட்டு, இணைய வழியில் வாக்களிக்கும் முறையை நடைமுறைப்படுத்தவும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய தொகுப்பு இளநிலை மருத்துவ இடங்கள் பல நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்த இடங்களை உடனடியாக தமிழக அரசிடமே மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும். அதே போல் முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் நிரம்பாத இடங்களையும், தமிழ்நாடு அரசிடமே ஒப்படைக்க வேண்டும். இதனால் தமிழ்நாடு மாணவர்கள் அந்த இடங்களில் சேர முடியும்.

பயிற்சி மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு மாணவர்களிடம், தொடர்சியாக 24 முதல் 36 மணி நேரம் வரை வேலை வாங்குவதை கைவிட்டு, 8 மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும். இது தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு தொடர்ந்து மீறப்படுவது வருத்தமளிக்கிறது. வார விடுமுறை, இதர அரசு விடுமுறைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு தொடர்பில்லாத, முதல்வர் காப்பீட்டு திட்ட வேலைகள் உட்பட வேறு வேலைகள் வழங்கப்படுவதை உடனடியாக கைவிட வேண்டும். இவற்றை கண்காணிக்க ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் உடனடியாக குழு அமைக்கப்பட வேண்டும்.

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவிலேயே, குறைந்த கட்டணத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கு தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகளில் தேவையான திருத்தங்களை செய்து மத்திய அரசு உடனடியாக உதவ வேண்டும்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி அல்லாத பிற பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கான பயிற்சியை, சரியான காலத்தில் தொடங்கி, தரமாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற்றாலும் கூட, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவப் படிப்புகளில் சேர நீட் அவசியப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:"காசி தமிழ் சங்கமத்துக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தொடர்பு இல்லை" - அமைச்சர் சேகர்பாபு!

ABOUT THE AUTHOR

...view details