சென்னை:நெல் கொள்முதல் பருவத்தை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையை, மத்திய அரசு ஏற்றுள்ளதாக, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டு வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு மே மாதம் 24ஆம் நாள் அன்றே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிட்டார்.
தண்ணீர் திறந்தவிட்டதோடு நில்லாமல், குறுவை நெல் சாகுபடியும் அறுவடையும் முன்பாகவே தொடங்கிவிடும் என்பதால் 2022 - 23ஆம் காரிஃப் சந்தைப் பருவக் கொள்முதலை அக்டோபர் 1ஆம் தேதி தொடங்குவதற்குப் பதிலாக, செப்டம்பர் 1ஆம் தேதி ஆரம்பித்திடவும், அப்படிக் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு 2022 - 23ஆம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை வழங்கிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் கடந்த ஜூன் 26 அன்று கடிதம் எழுதினார்.
மேலும், இதுகுறித்து மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் திட்டம் மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பியுஸ் கோயலை நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டது.