சென்னை:மேற்கு தாம்பரம் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள்(42). இவரது கணவர் மோகன். இந்த நிலையில், சைதாப்பேட்டையில் உள்ள மார்ஸ் மைன்ஸ் என்ற நிறுவனத்தை மோகன், மாநகராட்சி துணை மேயர் மகேஷ், கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பனின் மருமகன் குணசேகரன், செல்வராஜன், பாலமுருகன், திவாகரன் ஆகிய ஆறு பேர் பங்குதாரர்களாக இருந்து நிர்வகித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் மோகன் உயிரிழந்தார். மோகன் உயிரிழந்துவிட்டதால் அவரது பங்கை மனைவி இசக்கியம்மாள் அவர்களிடம் கேட்டு முறையிட்டுள்ளார். ஆனால், மோகனுக்கு உரிய பங்கை அவரது மனைவியிடம் தராமல் அலைக்கழித்து வந்த நிலையில், திடீரென தென்சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலிருந்து இசக்கியம்மாளுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், இறந்த மோகன் உயிருடன் இருப்பதுபோல, போலியாக சித்தரித்து கையெழுத்திட்டு பங்கை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பின்னர் உடனே, இது சம்பந்தமாக இசக்கியம்மாள் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று, தென்சென்னை மாவட்ட பதிவாளர் சத்யபிரியாவிடம் விசாரித்துள்ளார். அப்போது துணை மேயர் மகேஷ் உள்பட ஐந்து பேர் போலியான ஆவணங்களை சித்தரித்து அவரது பங்கை மோசடி செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.