முதலமைச்சருடன் மத்திய குழுவினர் ஆலோசனை சென்னை:தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அரசின் குழுவின் தலைவர் குணால் சத்யாத்ரி தலைமையிலான குழுவினர் 2 நாட்கள் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.
அப்போது மத்தியக் குழுவின் தலைவர் குணால் சத்யாத்திரி கூறும்போது, “மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பெருமழையால் பாதிக்கப்பட்ட சென்னை உட்பட 4 மாவட்டங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். ஆய்வுப் பணிகள் மேற்கொண்டதில் எங்களுக்கு மனநிறைவு ஏற்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே வெளியிட்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தகுந்த அறிவியல்பூர்வமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, செம்பரம்பாக்கம் ஏரியை முன்கூட்டியே திறந்துவிட்டதனால் பெருமளவிலான வெள்ளச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற புயல் 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வீசக்கூடியது. தற்போது வீசிய புயல் சென்னைக்கு அருகே கடலோரத்தில் நிலையாக நின்று பெருமழையைத் தந்து, தமிழ்நாட்டின் கடற்கரையையொட்டி நகர்ந்து ஆந்திரா மாநிலத்திற்குச் சென்றுவிட்டது. பெருமழை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களைப் பாதுகாத்து, உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் மாநில அரசு தடுத்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் விரைவாகச் செயல்பட்டு நிவாரணப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டுள்ளனர். பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்குமிடம், உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி சிறந்த முறையில் அரசு பாதுகாத்துள்ளது.
தமிழ்நாடு அரசு எங்களுக்கு வெள்ளச்சேதம் குறித்த விவரங்களை அளித்துள்ளது. எங்கள் குழுவும் பல்வேறு இடங்களைப் பார்வையிட்டு, உண்மை நிலவரங்களை ஆய்வு செய்து விவரங்களைத் திரட்டியுள்ளது. அவற்றின் அடிப்படையில் குழு தயாரிக்கும் ஆய்வு அறிக்கை மத்திய அரசுக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் அளித்து நிவாரண உதவிகள் விரைவில்
கிடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கடன் தவணை செலுத்துவதை தளர்த்த கோரிக்கை.. நிதியமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!