சென்னை:செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு வழங்கி சோதனை செய்யும் விரைவு திட்டத்துக்கு மத்திய அரசு 174 கோடியே 64 லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் திருச்சி உள்பட நாடு முழுவதும் 13 மாவட்டங்களை 2018ஆம் ஆண்டு தேர்வு செய்து மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கிய நிலையில், 2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் வழங்கும் விதமாக, ரேஷன் கடைகளில் உள்ள பொது விநியோகத் திட்டம் வாயிலாகவும், பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டம் வாயிலாகவும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த 2021ஆம் ஆண்டு அறிவித்தார்.
இதன்படி ரேஷன் கடைகள், மதிய உணவுத்திட்டம் உள்ளிட்டவைகள் மூலம் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கக்கோரி தமிழ் தேசிய பேரியக்கத்தின் மகளிர் ஆயத்தின் செயலாளர் கனிமொழி மணிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், பெரும்பாலான இந்தியப் பெண்களுக்கு ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுவதாகவும், செறிவூட்டப்பட்ட உணவு ஒழுங்குமுறை சட்டவிதியின்படி, தலசீமியா, ரத்த சோகை உள்ளவர்கள் இரும்புச்சத்து கொண்ட செறிவூட்டப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என்றும், எந்த ஒரு முறையான ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல், மக்களுக்கு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.