சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளை இன்று (டிச.07) ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். இந்த வான்வழி பார்வையின் போது தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகனுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ராஜ்நாத் சிங் சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும் போது, "பாதிப்புகளிலிருந்து மீள மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகிறது. ராணுவம், கடற்படை, கடலோரக் காவல் படை உள்ளிட்ட படைகள் மாநில அரசுக்கு உதவி வருகிறது. விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புயலால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் பிரதமர் மோடி கவலை அடைந்துள்ளார். இங்கு உள்ள நிலைமையை உன்னிப்பாக அவர் கவனித்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைப்பேசியில் பேசிய பிரதமர், மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.