தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மூன்று தலைமுறையும் போற்றும் எழுத்தாளர் கி.ரா" - வெங்கய்யா நாயுடு புகழாரம்!

மூன்று தலைமுறையும் போற்றும் எழுத்தாளராக கி.ராஜநாராயணன் இருக்கிறார் என இந்திய குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.

மூன்று
மூன்று

By

Published : Mar 13, 2023, 6:31 PM IST

சென்னை:எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் நூற்றாண்டு விழா, சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று(மார்ச்.13) நடைபெற்றது. வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் முன்னெடுப்பில், பொதிகை - பொருநை - கரிசல் பதிப்பகம் சார்பில் இந்த விழா நடைபெற்றது.

இதில், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தொகுத்த, "கி.ரா. நூறு" எனும் இரு தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இந்த இரண்டு நூல்களையும் வெளியிட்டார். நூற்றாண்டு காணும் கரிசல் காட்டின் முதுபெரும் படைப்பாளியான கி.ராஜநாராயணனின் படைப்புகள் குறித்த முழுமையான பார்வையை வாசகர்களுக்கு கொண்டு செல்லும் வகையில், இந்த நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய வெங்கய்யா நாயுடு, "கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கி.ரா கருதப்படுகிறார். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணன். இவர் இயல்பில் ஒரு விவசாயி, ஒரு தேர்ந்த கதை சொல்லி. 'நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

கர்நாடக இசை ஞானம் கொண்டவர், கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடியாக இருந்தவர். மூன்று தலைமுறையும் போற்றும் எழுத்தாளராக இருப்பவர். மின்னல், கோமதி, நிலை நிறுத்தல், கதவு, பேதை, ஜீவன், நெருப்பு, விளைவு, பாரதமாதா, கண்ணீர், வேட்டி, கரிசல்கதைகள், கி.ரா-பக்கங்கள், கிராமிய விளையாட்டுகள், கிராமியக்கதைகள் என்ற சிறுகதைகளை எழுதியுள்ளார். கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவல், கடந்த 1991ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றது. நாட்டுப்புற கதைகள் அனைத்தும் பேச்சுத் தமிழில் அமைந்தவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். கடைசிவரை அந்த நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார்.

நம்முடைய பழமையான பாரம்பரியமான கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் நெறிமுறை வேரை பற்றிக்கொள்ள வேண்டிய நேரமாக இந்த காலகட்டம் உள்ளது. நீங்கள் உங்களுடைய தாத்தா, பாட்டியுடன் பேசினால் நம்முடைய கலாச்சாரம், பண்பாடு குறித்து நமக்கு தெரிய வரும். மேலும், நாம் மேற்கத்திய கலாச்சாரத்தை விட்டுவிட்டு, நம்முடைய பழைய கலாச்சாரம், பண்பாட்டை பின்பற்ற வேண்டும். இது நமக்குள் அமைதியை கொண்டு வரும். மேலும் இது நமக்கு மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும்.

பழைய திரைப்படங்களில் நம்முடைய கலாச்சாரம், பண்பாடு போன்றவை வெளிக்காட்டப்பட்டது. தற்போதுள்ள சினிமாக்களில் வன்முறையும், விரும்பத்தகாத நிகழ்வும் காட்டப்படுகிறது. இது பொதுமக்களுக்கு நல்லதை தராது. நமது பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை திரைப்படங்கள் வழியாகவும், கலைகள், ஊடகங்கள் வழியாகவும் கடத்த வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஆஸ்கர் வென்ற The Elephant Whisperers.. பொம்மன் - பொள்ளி தம்பதி கூறியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details