சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனை அருகே மூன்று நபர்கள் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அருகிலிருந்த ரோந்து காவலர் சம்பவ இடத்திற்குச் சென்று தகராறில் ஈடுப்பட்ட மூவரையும் கைது செய்தனர். இவர்களை எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து நடத்திய விசாரணையில், பட்டாளம் பகுதியைச் சேர்ந்த இம்தியாஸ்(23), அசைன்(18), இர்பான்(25) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவென்யூ சாலையில் ஒருவரிடம் செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பறித்த செல்ஃபோனை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறின் போதுதான் காவலர்களிடம் சிக்கியதாக அவர்களே தெரிவித்துள்ளனர்.
கஞ்சா போதையில் செல்ஃபோன் பறிப்பு - பங்கு பிரிக்க சண்டையிட்டு போலீசில் சிக்கிய பரிதாபம்! - காவல்துறை விசாரணை
சென்னை: கஞ்சா போதையில் செல்ஃபோனை திருடி, பங்கு பிரிக்க சண்டை போட்டுக் கொண்ட இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் கொள்ளையடித்த செல்ஃபோனில் நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் சுனில் ஹனிஷ் என்பவரின் ஆதார் அட்டை இருப்பதை காவலர்கள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் சுனில் ஹனிஷ் என்பவர் புகாரளித்திருப்பதாக தெரியவந்தது. மேலும் அவரது புகாரில் நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் பணி முடிந்து நடந்து செல்லும்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் தாக்கி செல்ஃபோனை பறித்துச் சென்றதாகக் கூறியுள்ளார். அவரை அணுகி காவல்துறை செல்ஃபோனை ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடமும் எழும்பூர் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவர்கள் மீது ஏற்கெனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.