சென்னை:சேலையூரில் இரண்டடுக்கு கட்டிடத்தை ஜாக்கிமூலம் தூக்கிய போது சீலிங் சரிந்து விபத்துக்குள்ளானதில் மூன்று உ பி தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய நிலையில் தற்போது ஒருவர் உயிரிழந்துள்ளார். இது மட்டுமின்றி ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் கர்ணம் தெருவில் லஷ்மி என்பவரின் இரண்டு அடுக்கு வீட்டில் கட்டிட வேலை நடந்து வந்துள்ளது.
கட்டிட வேலைகளுக்காக உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த 11 கூலி தொழிலாளர்கள் இந்த வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை வடமாநில தொழிலாளர்கள் ஜாக்கிமூலம் இரண்டு அடுக்கு கட்டிடத்தை உயர்த்திய போது எதிர் பாராத விதமாக தீடிர் என வீட்டின் ஒருபக்க சீலிங் சரிந்து விழுந்தது. இதனால் அந்த வீட்டினுள் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த மூன்று தொழிலாளிகள் மட்டும் இடிபாடுகளில் வெளியில் வரமுடியாத படி சிக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து தாம்பரம், மேடவாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு வாகனத்தில் விரைந்து வந்த வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பேஸ்கார்(28) என்கிற நபர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். மேலும் ஓம்கார் என்பவருக்குக் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது, மற்றொருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேற் சிகிச்சைக்காக இவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.